Saturday, September 5, 2009

அப்பாவும் நானும்

14 அக்டோபர், 1981 - நுங்கம்பாக்கம் GG hospital மொட்டைமாடியில் அப்பா டென்ஷன் தாங்காமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தார். அப்போது மாமா அவசரமாக ஓடி வந்து 'பெண் குழந்தை பிறந்துருக்கு' என்று கூற அப்பா 'பெண்ணா?' என்று கேட்டுக் கொண்டே கீழே ஓடினார். அப்பா கேட்ட கேள்வியில் மாமாவிற்கு ஒரே கவலை....ரூமிற்கு சென்று எட்டிப் பார்த்தார்....அங்கு அப்பா என்னை கையில்
தூக்கி சந்தோஷமாக கொஞ்சிக் கொண்டுருப்பதைப் பார்த்து (background music: வா வா என் தேவதையே...) நிம்மதி பெருமூச்சு விட்டார்.

அம்மா குழந்தை பெற்று ஆறு மாதங்கள் தன் அம்மா வீட்டில் மாம்பலத்தில் இருக்க, அப்பா தினமும் mount roadல் ஆபீஸ் வேலை முடிந்தவுடன் டான் என்று வந்து விடுவார் என்னோடு விளையாட. அதற்கு பின் அவர் கிளம்பி பல்லாவரத்திற்குச் செல்ல வேண்டும் என்று எனக்கு தெரியுமா என்ன....

14 அக்டோபர், 1982 - எங்கள் குடும்பம் பெரிய கலகலப்பான குடும்பம். அம்மாவிற்கும் சரி அப்பாவிற்கும் சரி கூடப்பிறந்தவர்கள் நான்கு பேர், இதோடு சேர்த்து அவர்கள் ஒன்று விட்ட தம்பி தங்கைகள் வேறு, அதனால் ஒரு விசேஷமோ கல்யாணமோ என்றால் தெருவே களைக் கட்டும். அதுவும் அப்பா குடும்பத்தின் முதல் பெண் குழந்தையின் முதல் பிறந்த நாள் என்றால் சும்மாவா.....தாம் தூம் என்று நடந்தது.

போட்டோ என்பதே பெரிய விஷயமாக இருந்த காலத்தில் அப்பா அலையோ அலை என்று அலைந்து கலர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்துருந்தார். அந்த போடோக்கள் (negatives உட்பட) மற்றும் இப்படி ஒவ்வொரு கால கட்டத்தில் எடுத்தவைகளும் இன்றும் பத்திரமாக இருக்கின்றன, அழகான ஆல்பங்கள் வடிவத்தில். வசதி வாய்ப்பு வந்தவுடன் அப்பா வாங்கியது ஒரு analog yaaschica கேமரா (அது இன்று வரை என்னிடம் இருக்கிறது). அதில் அப்பா எடுத்த போட்டோகளுக்கு கணக்கு வழக்கே இல்லை!

இன்று நான் நன்றாக போட்டோ எடுக்கிறேனென்றும், அலுக்காமல் அதை upload செய்து அனுப்பிகிறேனென்றும், வருடா வருடம் அதில் சிலவற்றை தேர்ந்து எடுத்து ஆல்பமாக print செய்து ஊருக்கு எடுத்து வருகிறதையும் பாராட்டி பேசுபவர்கள் பலருண்டு. இதை யாரிடமிருந்து கற்று கொண்டேனென்று நினைக்கிறீர்கள் ??

அப்பா எல்லோரிடமும் சிரிக்கச் சிரிக்க பேசுவார், சுலபமாக பழகி விடுவார். வீட்டிற்கு வந்து கீரை விற்பவளிடம் ஆரம்பித்து தெருவில் மாம்பழம் விற்பவன் வரை எல்லோரும் அப்பாவிடம் தங்கள் சொந்த கதை சோக கதையைச் சொல்வார்கள் (எங்கள் வீட்டில் தான் முதல் போனி என்பது வேறு விஷயம்). சில நேரங்களில் அப்பா அவர்களின் பிரச்சனைக்கு தீர்வும் சொல்லிருக்கிறார். முடியாத நேரங்களில் அவர்களிடம் கலகலப்பாக பேசி கேட்டதிற்கு மேல் பத்து ரூபாய் கொடுத்து சந்தோஷமாக அனுப்பியும் வைத்திருக்கிறார். இருக்கும் இடத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, அப்பாவை தெரியாதவர்களும் கிடையாது, பிடிக்காதவர்களும் கிடையாது.

இன்று என்னை extrovert என்கிறார்கள். Performace Reviewல் 'excellent people skills' என்று மேனேஜெர் எழுதுகிறார். இதை யாரிடம் கற்றுக் கொண்டேனோ ?

அப்பா நிறைய புத்தகம் படிப்பார். படிப்பதோடு மட்டும் இல்லாமல் நல்ல கதைகளைச் சேகரித்து அவற்றை பத்திரப் படுத்தி வைப்பார். அதில் சில கதைகளை என்னிடம் அடிக்கடி படிக்கக் கொடுப்பார். இதில் தமிழும் உண்டு ஆங்கிலமும் உண்டு. அவருடைய சிறு வயதில் 'American Library' சென்று புத்தகங்கள் வாயிலாக ஆங்கிலம் கற்று கொண்டதைப் பற்றி அடிக்கடி கூறுவார். வீட்டில் அடிக்கடி எனக்கு தமிழில் பரீட்சை வைப்பார் - 'வியாழக்கிழமை வாழைப்பழத் தோலில் எழைக்கிழவன் வழுக்கி விழுந்தான்' , 'நல்லெண்ணெய் நல்ல எண்ணெய்' போன்ற வாக்கியங்களை படிக்கவும் எழுதவும் சொல்லுவார்.

நான்காம் வகுப்பு வரை தான் நான் பள்ளிக்கூடத்தில் தமிழ் படித்தேன். அப்பா வங்கியில் வேலை செய்வதால் வட இந்தியாவிற்கு மாற்றல் ஆகி விட்டால் நான் ஹிந்தி தெரியாமல் கஷ்ட பட கூடாதென்று அம்மா சொல்ல பள்ளிக்கூடத்தில் தமிழுக்கு பதில் ஹிந்தி படிக்க ஆரம்பித்தேன். ஆனாலும் இன்று தமிழ் படிப்பதிலும் எழுதுவதிலும் எனக்குப் பிரச்னை இல்லை, அது ஏனோ ?

ஆறாம் வகுப்பில் பள்ளிக்கூடத்தில் ஆங்கில பேச்சுப்போட்டி நடக்க இ௫க்கிறது என்று அப்பாவிடம் சொன்ன அடுத்த நாள் அப்பா ஒரு டைப் அடித்த பேப்பரை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அப்பாவின் ஆங்கிலத்தைப் பார்த்து நான் மிரண்டே விட்டேன். ஏற்ற இறக்கத்தோடு எப்படி பேச வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தார். நன்றாகப் பேசினேன் என்று நினைத்தேன், ஆனாலும் பரிசு கிடைக்கவில்லை. அப்பாவிடம் வந்து சொன்ன போது 'மேடையில் எல்லோர் முன்னிலையிலும் stage fear இல்லாமல் பேசி விட்டாய். அதுத்த முறை நீ பேச போவதை நீயே சொந்தமாக எழுத வேண்டும், நான் அதை திருத்தி மட்டும் தருகிறேன் because you should never live on borrowed brains. அதோடு கண்ணாடி முன் நின்று பேசி பழகு, கை அசைவுகள், முக பாவங்களிலும் கவனம் செலுத்து' என்று கூறினார். அதன் பிறகு திருத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நான் பரிசு வாங்கின பிறகு வீட்டிற்கு வந்து அப்பாவிடம் பேசி காட்டுவேன் என்ற நிலைமைக்கு வந்து விட்டது. பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் நான் வாங்கிய பரிசுகள் இன்றும் எங்கள் வீட்டு showcaseல் இருக்கிறது. இன்று வரை எனக்கு அலுவலகத்தில் 'great presenter/orator' என்ற பெயர் உண்டு. இதற்கு விதை விதைத்தது யாரோ ?

அப்பா அடிக்கடி ''Letters to the editor'' பிரிவிற்கு Hindu, துக்ளக், விகடன் போன்ற பத்திரிகைக்களுக்கு கடிதங்கள் எழுதுவார். சில சமயம் தன் கருத்துக்கள் பற்றி எழுதுவார், சில சமயம் சுற்றி இருக்கும் பிரச்சனைகள் பற்றி எழுதுவார். அதை என்னிடம் கூப்பிட்டுக் காட்டுவார். படிக்கச் சொல்லி என் அபிப்பராயத்தைக் கேட்பார்.

இன்று நான் பதிவுகள் நன்றாக எழுதுகிறேன் என்று நீங்கள் சொல்கிறீர்கள் (:D)அதற்கு அன்று பிள்ளையார் சுழி போட்டது யாரோ ?

சோகமாக இருக்கும் பொழுது அப்பா 'உனக்கு battery recharge தேவைப்படும் போல இருக்கிறதே' என்று சொல்லி என்னை அணைத்துக் கொள்வார், என்னையும் அறியாமல் சிரித்து விடுவேன் (இது வசூல்ராஜா அல்லது munnabhai MBBSku மிகவும் முன்னாடி ஆரம்பித்தப பழக்கம்).

நினைவு தெரிந்த வயதிலிருந்து நான் கேட்டு அப்பா எதுவுமே இல்லை என்று சொன்னதில்லை. அதற்கு அர்த்தம் செல்லம் கொடுத்து என்னை கெடுத்து விட்டார் என்பதில்லை. ஏழாவது படிக்கும் பொழுது சைக்கிள் வேண்டுமென்று கேட்டதிற்கு அப்பா சொன்னார் ''நீ வகுப்பில் முதல் ரேங்க் வாங்கு, அதற்கு பரிசாக சைக்கிள் வாங்கி தருகிறேன்''. அது வரை படிப்பில் பெரிதாக கவனம் செலுத்தாத நான் அந்த முறை முட்டி மோதி படித்து முதல் ரேங்க்கும் வாங்கி விட்டேன். அப்பா மிகவும் பெருமை பட்டார், அன்றைய காலத்தில் எல்லோரும் பார்த்து வியக்கும் BSA SLR (:D) வாங்கிக் கொடுத்தார். முதல் ரேங்க் வாங்கியதில் திடீரென்று மாணவர்கள் மத்தியுலும் ஆசிரியர்கள் மத்தியுலும் பிரபலமாகி விட்ட நான் அதை விட்டுக் குடுக்க மனமில்லாமல் ஒழுங்காகப் படிக்க ஆரம்பித்தேன்.

அப்பாவிற்கு ஊரு சுற்றி பார்பது ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு வருடமும் பள்ளி விடுமுறைக்கு எங்கேயாவது போவதுண்டு, அதுவும் நன்றாக ஏற்பாடு செய்து பல சுவாரஸ்யமான இடங்களுக்கு சௌகர்யமாக அழைத்துச் செல்வார். ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து பத்ரிநாத் கேதார்நாத் வரை, ஊட்டியில் ஆரம்பித்து குலு மனாலி வரை, பெங்களூரில் ஆரம்பித்து பாம்பே டில்லி வரை, மைசூரில் ஆரம்பித்து ஜெய்பூர் வரை பல இடங்களுக்குப் போய் இருக்கிறோம். இன்று நான் US, Canada, Europe என்று ஊரு சுத்தும் பொழுது எப்படி அலுக்காமல் சுத்தி கொண்டுருக்கிறாய் என்று யாரவது கேட்டால் சிரிப்பு வராத என்ன ??

ஒன்பதாம் வகுப்பில் பள்ளிக்குச் சென்று வருகிற வழியில் ஒரு சைக்கிள் கடைக்காரன் அடிக்கடி என்னை கேலி செய்வான்....'புது டிரஸ் பிரமாதம்', 'பூ வெச்சுக்கோ' இப்படி ஏதாவது சொல்லுவான். வெறும் கலாட்டா தானே என்று நான் அதை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. ஒரு நாள் அப்பா என்னிடம் வந்து அவனைப் பற்றிக் கேட்கவே எனக்கு கொஞ்சம் படபடப்பு. இன்று நான் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருக்கும் பொழுது ஒருவன் 'மாமா' என்று என்னைக் கூப்பிடான். திரும்பி பார்த்தால் குரல் நம்ம சைக்கிள் கடையிலிருந்து வந்தது போல் இருந்தது என்று கூறிச் சிரித்தார். அப்பாவின் சிரிப்பைப் பார்த்து வந்த தெம்பில் எல்லாக் கதையையும் அப்பாவிடம் சொன்னேன். நான் சொல்லுவதை பொறுமையாகக் கேட்டுவிட்டு சொன்னார் 'இதையெல்லாம் நீ இனிமேல் சமாளிக்கக் கற்று கொள்ள வேண்டும். அவன் கலாட்டா செய்வதை நீ கண்டு கொள்ளாமல் போகும் வரை ஒரு பிரச்சனையும் இல்லை, அவனுக்கு அதில் ஒரு அல்ப சந்தோஷம் என்று விட்டு விடு. எப்பொழுது நீ அவனிடம் கோபித்துக் கொண்டு சண்டை போடுகிறாயோ, அப்பொழுது தான் அவனுக்கு இன்னும் உற்ச்சாகம் வரும். மற்றும் அவன் நமது ஏரியாவில் இருப்பதால் உன்னிடம் பெரிதாக வம்பு பண்ணும் தைரியம் அவனுக்கு இருக்காது'. அன்று முதல் இது போல் பல கடலை மற்றும் ஜொள்ளு மேட்டரைகளை அப்பாவும் நானும் அலசி ஆராய்ந்து சிரித்து இருக்கிறோம் (அதில் சிலவற்றை பிற்பகுதியில் எழுதி இருக்கிறேன்).

பத்தாம் வகுப்பில் அப்பாவிற்கு Chandigarhகு மாற்றல் ஆகி விட்டது. என் படிப்பிற்காக நாங்கள் சென்னையில் தங்கி விட, அப்பா Chandigarhகு சென்றார். இதற்கு முன் திருச்சிக்கு மாற்றலானா பொழுது நாங்கள் எல்லோரும் சேர்ந்து சென்றதால் இந்த முறை அப்பா தனியாக செல்வது என்னோவோ போல் இருந்தது. அப்பா ஊரிலிரிந்து முதல் முறை சென்னை திரும்பிய பொழுது அம்மாவுடன் சீக்கிரம் எழுந்து வாசலில் ரங்கோலியில் ''Welcome home, appa'' என்று சந்தோஷமாக போட்டது இன்றும் நினைவில் இருக்கிறது. அப்பாவும் விமான வசதி பெரிதாக இல்லாத அந்த காலத்திலும் மாதம் ஒரு முறையாவது GT பிடித்துச் சென்னை வந்து விடுவார். இதை தவிர அடிக்கடி கடிதமும் எழுதுவார். அந்த வருடம் எங்கள் வீட்டில் டெலிபோன் வசதி வந்தவுடன் STD bill பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் பேசிய நாட்களுமுண்டு. எப்படா பத்தாவது பரீட்சை முடியும், எப்படா Chandigarh சென்று அப்பாவை பார்ப்போமென்று ஆகி விட்டது. இப்படியே இரண்டு வருடங்கள் ஓடி விட்டது.

பன்னிரெண்டாம் வகுப்பில் நான் எங்குச் சென்றாலும் பின்னாடி வந்து தொல்லை செய்பவர்கள் பற்றி அப்பாவிடம் அடிக்கடி பேசுவேன். காதல் தேசம் படம் பார்கயில் (SPBயும் தபுவும் அப்பா மகள்) தபு பின்னாடி சுற்றுபவர்கள் SPBகு விழுந்து விழுந்து வேலை செய்யும் காட்சி - அப்பா திரும்பி என்னிடம் சொன்னார் ''உன் பின்னாடி சுத்தற பசங்கள நாளைக்கு வீட்டுக்கு வர சொல்லு, எக்கச்சக்கமா வேலை இருக்கு'' ! இன்னும் ஒரு முறை ஒருவன் என்னிடம் லெட்டர் கொடுக்க அலையோ அலை என்று அலைய, நான் தொலைந்து போ என்று லெட்டரை வாங்கிக் கொண்டேன். அதில் 1008 எழுத்து பிழைகளோடு ஒரு கவிதை (எனக்கு சும்மாவே நிலவையும் பெண்ணையும் சேர்த்துச் சொல்லும் கவிதை என்றால் அலர்ஜி!) - ஓடும் நிலவு கூட என்னைப் பார்த்து விட்டு செல்கிறது, ஆனால் நீயோ என்னை பார்த்தும் பாராமல் போகிறாயே, அது ஏனோ?......இதை படித்து நானும் அப்பாவும் வயறு வலிக்கும் வரை சிரித்தது நேற்று நடந்தது போல் இருக்கிறது. இப்படி ஜாலியாக இருக்கும் அப்பா காலித்தனம் செய்பவர்களையும் சமாளித்திருக்கிறார். தொடர்ந்து Blank calls வரும் பொழுது டெலிபோனை எடுத்து ''ஹலோ, RA Puram போலீஸ் ஸ்டேஷன்'' என்று சொல்லி போன் செய்பவனை மிரள வைத்திருக்கிறார்.

IIT பரீட்சை எழுதி தேர்வு பெறாமல் சோர்ந்து இருந்த என்னை அப்பவோ அம்மாவோ ஒரு வார்த்தைக் கூடத் திட்டவில்லை. அப்பா தெரிந்தவர்களிடம் விசாரித்து என்னை என் TNPCE மார்க்குக்கு ஏற்றது போல் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்து விட்டார். அது சென்னையில் இல்லாததால் ஹாஸ்டலில் தங்க வேண்டி வந்தது. தாத்தா இறந்த போது கூட அழாத அப்பா என்னை ஹாஸ்டலில் சேர்த்த பின் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் அழுதார். மாதம் ஒரு முறை தான் வீட்டிற்கு செல்லலாம் என்ற எங்கள் ஹாஸ்டல் விதியை முறி அடித்தே நானும் அப்பாவும் தான். நான் வாரம் ஒரு முறை வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன் ! அதிலும் எங்கள் ஹாஸ்டலில் பெண்களை தனியாக வீட்டிற்குச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள், பெற்றோர்கள் வந்து அழைத்துச் செல்ல வேண்டும். அப்பாவும் அலுக்காமல் வருவார்.

இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகு college bus கிண்டி வரை வந்ததால் வீட்டிலிருந்து போக ஆரம்பித்தேன். காலை 7 மணிக்கு கிண்டியில் பஸ்ஸை பிடிக்க வேண்டுமென்றால் மந்தவெளியிலிருந்து 6 மணிக்கு கிளம்ப வேண்டும். அதே போல் சாயங்காலம் வீடு திரும்ப எட்டு ஆகிவிடும். முதல் நாள் சாப்பிட உட்கார்ந்த நான் உட்கார்ந்த இடத்திலேயே தூங்கி ஆடுவதை பார்த்த அப்பா அடுத்த நாள் முதல் என்னை ஸ்கூட்டரில் கிண்டி வரை கொண்டு விட்டு கூட்டி வர ஆரம்பித்தார், மாத கணிக்கில் இல்லை இரண்டு ஆண்டுகளுக்கு !

பொறியியல் படிப்பு முடிந்தவுடன் மேற்படிப்புக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தேன். அப்பா எப்பொழுதும் தன் வேலையே தானே செய்து கொள்ள வேண்டுமென்பார், கைஎழுத்து வேண்டுமென்றால் மட்டும் என்னிடம் வா என்பார். பாஸ்போர்டிலிருந்து education லோன் வரை எங்கு சென்றாலும் இதை கொண்டா அதை கொண்டா என்று எல்லாச் சான்றிதழ்களையும் கேட்பார்கள். வீட்டிற்கு வந்து தேட வேண்டும் என்று நினைத்த எனக்கு அதிர்ச்சி. பீரோவில் வருடம் வாரியாக எல்லாவற்றையம் அப்பா தனி தனியாக பிரித்து, சரியான பெயர்களுடன் கூடிய fileகளில் போட்டு வைத்திருந்தார். இன்று ஜெர்மன்யில் வரி பணம் திரும்பி பெற எனது ஆடிடரிடம் பேசும் பொழுது எல்லாவற்றையும் தெளிவாக அனுப்பி இருக்கிறாய் என்பார். எங்கு பார்த்தேன் இந்த நல்ல பழக்கத்தை ?

நானே application போட்டேன், விசாவிற்கு எல்லாவற்றையம் பார்த்துக் கொண்டேன். German embassy எங்கு இருக்கிறது என்று கூட இன்று வரை அப்பாவிற்குத் தெரியாது. மகளை தனியாக எதற்கு ஜெர்மனி அனுப்புகிறாய் என்று பலர் கேட்டாலும் அவள் பார்த்துக் கொள்வாள் என்று ஒரே வரியில் பதில் சொல்லுவார். இன்று பலர் என்னிடம் தனியாக எப்படிச் சென்றாய் என்று கேட்கிறார்கள்....,எங்கிருந்து வந்திருக்கும் இந்த தைரியமும் தன்னம்பிக்கையும் எனக்கு ??

நான் ஜெர்மனி வந்து ஒரு மாதம் ஆயிருக்கும். ஒரு நாள் வீடு நினைவாகவே இருந்தது, போன் பண்ணி அப்பாவிடம் பேசலாமென்றுத் தோன்றியது, ஆனால் போனில் வார்த்தையே வரவில்லை, அப்பா பயந்து விடுவார் என்று அப்புறம் பேசுகிறேன் என்று வைத்து விட்டேன். அதுத்த நாள் அப்பா போன் பண்ணி என்னிடம் விகடனில் படித்த கடி ஜோக்குகள் சொன்னார். நான் விழுந்து விழுந்துச் சிரிக்கயில், இந்த சிரிப்பைத் தான் நேற்று கேட்க முடியவில்லை என்று சொல்லி அப்பா நெகிழ்ந்து போனார், எனக்கோ கண்ணில் மறுபடியும் கண்ணீர்....

திருமண வயது வந்தவுடன் அப்பாவிடம் தான் ஒருவரை விரும்புகிறேன் என்றும், அவரையே திருமணம் செய்து கொள்ள விருப்பப் படுகிறேன் என்றும் முதலில் சொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்த பொழுது அப்பாவே கேட்டார் ''யாரு, அஷோக்கா ?'' (என் கணவர் பெயர் அஷோக்). அதிர்ச்சியுடன் கூடிய சிரிப்புடன் ஆம் என்று தலை ஆட்டினேன். என் பிறந்த நாளையே பெரிதாக கொண்டாடின அப்பாவிற்கு என் திருமணத்தை நடத்தச் சொல்லியா தர வேண்டும்...ஜமாய்த்து விட்டார்.

அப்பாவிற்கு இசை என்றால் உயிர். அருமையாக பாடுவார் - தமிழிலும் சரி, ஹிந்தியிலும் சரி. இத்தனைக்கும் அப்பாவிற்கு ஹிந்தி தெரியாது. அர்த்தமே தெரியாமல் வெறும் கேள்வி ஞானத்தில் கிஷோர் குமார் பாட்டுக்களைப் பாடி தூள் கிளப்பி விடுவார். அப்பா ''ஒளிமயமான எதிர்காலம்'' பாடாமல் எங்கள் வீட்டில் விசேஷங்கள் நடந்ததே இல்லை ! கடை கடையாய் தேடித் தேடி நல்ல பாட்டு கேசட்களைச் சேர்த்து வைப்பார் (இன்று DVD :D), அதே போல் சினிமா படங்களும். இன்று என்னிடம் 10 GB பாட்டு, தூங்கி எழுந்து படுக்கப் போகும் வரையில் laptopilo iPodilo பாட்டு நாள் முழுவதும் ஓடிக் கொண்டே இருக்கும். என் கணவர் இதற்கு என்னை கிண்டல் செய்து என்ன பயன் ??

அப்பாவை நான் டென்ஷனாகப் பார்த்த ஞாபகமே இல்லை. அடிக்கடி ''take it easy policy'' என்பார். நான் கோவப்பட்டு அப்பாவை கையில் தட்டினால் ''என்ன மைகேல் அப்பாவையே அடிக்கற'' என்பார் (மைகேல் மதன காம ராஜன்).

அப்பா ஒரு சுகவாசி. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று அடிக்கடிச் சொல்லுவார். தூங்க போவதற்கு முன் திரையை போட்டு விட்டு, ஏ.சி on செய்து விட்டு, மெல்லியதான சில பாடல்களைப் போட்டு விட்டு வந்து கட்டிலில் படுத்துக் கொள்வார். நானும் பக்கத்தில் போய் படுத்துக் கொண்டு ரொம்ப நேரம் அப்பாவிடம் கதை பேசுவேன்....சுகமான நினைவுகள்....

நான் பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் ''Best outgoing student'' வாங்கியதில் அப்பாவின் பங்கைப் பற்றி இன்னும் கூறவா வேண்டும் ? பாஷை தெரியாத மேல்நாட்டிற்கு வந்து படித்து வேலை பார்ப்பதில் அப்பாவின் பங்கைப் பற்றி இன்னும் கூறவா வேண்டும் ? மனதுக்குப் பிடித்தவரை கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருப்பதில் அப்பாவின் பங்கைப் பற்றி இன்னும் கூறவா வேண்டும் ? நான் குழந்தையாக இருக்கும் போதே எல்லோரும் அப்படியே அப்பாவை உரித்து வைத்துருக்கிறேன் என்று சொல்வார்கள்....அப்பாவும் அதை கேட்டுப் பெருமை பட்டுக் கொள்வார். என்னை யாரவது புகழ்ந்தால் ''யாரோட பொண்ணு'' என்று அப்பா மார் தட்டிக் கொள்வார்....அதை பார்ப்பதற்காகவே எல்லோரும் புகழும் வகையில் நடந்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றும் !

அப்பா முதல் முறையாக நான் கேட்டக் கேள்விக்கு தெரியாது என்று பதில் சொன்ன பொழுது அதிர்ச்சியாக இருந்தது....மெதுவாக யோசித்து பார்த்த பிறகு தான், நான் வளர்ந்து விட்டேனென்று உரைத்தது, எனக்கு அது பிடிக்கவில்லை, ஜீரணிக்கவும் முடியவில்லை...

இன்று அப்பாவிற்கு வயது 55. பல முறை அவரால் முன்பு போல் இருக்க முடியவில்லையே என்று தோன்றும்....ஆனால் நானும் இன்னும் இரட்டை ஜடை போட்ட சிறுமி அல்ல என்பது நினைவுக்கு வரும்....அவர் செய்ததெல்லாம் போதும், இது நான் திருப்பிச் செய்ய வேண்டிய கட்டம் என்ற கடமையும் முன் வந்து நிற்கும்.

அப்பா இன்றும் அதே சிரித்த முகத்துடன் ஜாலியாக தான் உண்டு, தன் computer உண்டு என்று இருக்கிறார்....ஆபீசிலிருந்து வந்தவுடன் ஒரு பக்கம் கம்ப்யூட்டரில் விகடன் படிப்பதென்ன, இன்னொரு பக்கம் mp3 download பண்ணுவதென்ன என்று படு பிசியாக இருப்பார். நான் வார வாரம் போன் செய்யும் பொழுது என்ன சாப்பிட்டேன் என்று கேட்பார். நான் salad, soup என்றுச் சொன்னால், ஐயோ, நான் உன்னை நினைத்துக் கொண்டே இப்பொழுது தான் வெங்காய வத்தக்குழம்பும் உருளைக்கிழங்கும் சாப்பிட்டேன் என்று என்னை கிண்டல் செய்வார்.

வருடா வருடம் இந்தியா போகும் பொழுது அப்பாவை சென்னை ஏர்போர்டில் பார்த்த பிறகு தான் அப்பாடி என்று இருக்கும்....ஏனென்றால் இதில் முதல் Hug அப்பாவிற்கு தான்.......என் அப்பாவிற்கு.......

Note of Wisdom: You do not have to worry about your kids not listening to you but you should worry about them always watching you. They are what you do !

Disclaimers: அம்மா கோபித்துக் கொள்ளாதே, நான் அப்பா செல்லம் என்பதால் அப்பாவைப் பற்றி முதலில் எழுதி விட்டேன்...உன்னை பற்றி எழுதவும் நிறைய இருக்கிறது :)

அப்பாவைப் பற்றி சொல்லும் சாக்கில் என்னை பற்றியும் நன்றாக பீத்தி கொண்டுவிட்டேன்...பொறுத்துக் கொள்ளவும் :D

Statutory Warning: பதிவின் பெயரையும் background musikayum பார்த்து இது ''அபியும் நானும்'' மாதிரி இருக்கிறது என்று ஒப்பிட வேண்டாம்....அது கதை, இது அதையும் தாண்டி புனிதமானது, புனிதமானது, புனிதமானது......

Hit Counter
Website Hit Counter I had decided to have a counter only after I hit a 1000 views and since it happened last week (as on 14 Dec 2009), now is the time to see some stats :)