Sunday, November 29, 2009

அம்மாவை பிடிக்குமா ?

அம்மா திங்கட்கிழமையிலிருந்து லீவ்....maternity லீவ்.....கொஞ்சம் கூடப் படுத்தாமல் புதன்கிழமை நான் பிறந்து விட்டேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆபீஸ் போக வேண்டிய கட்டாயம். என்னை விட்டுச் செல்ல மனமில்லாத அம்மாவிடம் பாட்டி நான் பார்த்து கொள்ள மாட்டேனா என்று கேட்க, அம்மா முதல் நாள் அரை மனதோடு ஆபீசிற்கு சென்று எப்படா சாயங்காலம் ஆகுமென்று காத்திருந்து அவசர அவசரமாக வீட்டிற்கு திரும்பி வந்தால்....நான் இல்லை. ''எங்கம்மா குழந்தை?'' என்று பரிதவிப்புடன் அம்மா கேட்க ''ரகு கூட்டிண்டு போயிருக்கான்'' என்று பாட்டி கறிகாய் நறுக்கிக் கொண்டே சொல்ல, அம்மாவிற்கு முகம் சோர்ந்து விட்டது. உடம்பும் சோர்ந்து போயிருக்கவே துணி மாற்றி, முகம் அலம்பி, டிபன் கடையை முடித்து விட்டு வந்து பார்த்தால் தாத்தா மடியில் நான். எனக்கு பால் குடுக்கும் சாக்கில் என்னை அள்ளி அணைத்துக் கொண்ட பிறகு தான் அம்மா பெருமூச்சு விட்டாள்.

ஒரு புறம் கூட்டு குடும்பத்தில் நான் இருப்பது அம்மாவிற்கு சந்தோஷமாக இருந்தாலும், தன்னிடம் குழந்தையை ஒரு அரை மணி நேரம் கூட வைத்துக் கொள்ள முடிய வில்லையே என்ற ஏக்கம் இன்னொரு புறம்....ஒரு பெரிய குடும்பத்தில் முதல் பெண் குழந்தை என்றால் சும்மாவா ? பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பாக்கள், அத்தை, தாத்தா, பாட்டி என்று போட்டி போட்டுக் கொண்டு என்னை தூக்கியதில் நான் தரையில் இருந்த நேரமே கம்மி.

இப்படி இருக்க, நான் வைத்தது தான் சட்டம். இல்லையென்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து சாதித்துக் கொள்வேன். இந்த அழுகைக்கு அம்மா மட்டும் மசிய மாட்டாள். இது தான் சரி, புரிந்து கொள்ளென்று உபதேசம் செய்வாள். அன்று எனக்கு அம்மாவைப் பிடிக்கவில்லை....

இன்று இதே உபதேசத்தை நான் தம்பி தங்கைகளிடம் சொல்லி நல்ல பெயர் வாங்கிக் கொண்டுருக்கிறேன். இன்று எனக்கு அம்மாவைப் பிடித்திருக்கிறது :)

ஒரு வயதிலேயே மழலை இல்லாமல் தெளிவாக பேச ஆரம்பித்த என்னை வீட்டில் ஒரு வருடத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல் பள்ளிக்கு அனுப்புவது என்று முடிவு செய்து இரண்டு வயதிலேயே சேர்த்தும் விட்டார்கள். மாதம் ஒன்றாகியும் நான் ''ரோடு மேல காரு, காருக்குள்ள யாரு, எங்க மாமா நேரு'' தவிர வேறு எதுவுமே சொல்லாதது அம்மாவை கவலைக்குள் ஆழ்த்தியது. என் படிப்பிற்க்காகவாது பல்லாவரத்தை விட்டு வேருங்காவது செல்வது என்று முடிவு செய்து என்னை மந்தைவளியில் இருக்கும் St.John's il சேற்று விட்டாள். புது இடம், புது நண்பர்கள், அடம் பிடித்தேன், அழுதேன்.....அன்று எனக்கு அம்மாவைப் பிடிக்கவில்லை....

இன்று வரை என்னால் என் பள்ளிப் பருவத்தை மறக்க முடியாது. நான் கற்றதில் பாதிக்கு மேல் அங்கு தான். Farewell dayil குலுங்கி குலுங்கி அழுததும் என்றும் மறக்காது. என் பள்ளிக்கட்டிடத்தை இன்று பார்த்தாலும் உதட்டோரம் ஒரு புன்சிரிப்பு மலரும், அத்தனை இனிமையான நினைவுகள்......இன்று எனக்கு அம்மாவைப் பிடித்திருக்கிறது :)
(Photo from my school annual day - paavam andha payyan, avanukku kannathula lipstick !)

LKGயில் என் கிளாஸ் டீச்சரை கண்டால் எனக்கு ஆகாது. எப்போதும் சிடு சிடுவென்று இருப்பாள். Rhymes பரீட்சையில் அவள் என்னை எதற்கோ திட்ட, நான் எரிச்சலாகி ''Rhymes சொல்ல முடியாது போடி'' என்று சொல்ல (:D), அவள் என் ரிபோர்ட் கார்டில் முட்டை போட்டுக் கொடுக்க, அதை கொஞ்சம் கூட கவலைப் படாமல் நான் வீட்டிற்கு எடுத்துச் சென்று அம்மாவிடம் காட்ட, முதல் நாள் மணிக்கணக்காக என்னோடு Rhymes படிக்க போராடின அம்மாவிற்கு உள்ளுக்குள் ஏதோ எழுந்து விட்டது....விடு விடுவென என்னை ஒரு கையில், ரிபோர்ட் கார்டை இன்னொரு கையில் பிடித்துக் கொண்டு எடுத்த ஓட்டம் Principal ரூம் வாசலில் தான் நின்றது. Principal என்னிடம் ''Rhymes'' சொல்லச் சொல்லி கேட்க, நான் ஒன்றுமே தெரியாதது போல் சொல்ல, என் கிளாஸ் டீச்சருக்கு நல்ல டோஸ் :D !

முதலாம் வகுப்பில் தமிழ் படிக்க ஆரம்பித்தேன். எனக்கு தமிழ் பரீட்சை என்றால் அம்மாவிற்கு சிம்ஹ சொப்பனம்....காரணம் எனக்கு பெரிய கால் பொட...I mean...போட வராது....''சேவல்'' எழுதச் சொன்னால் ''செவல்'' என்றும் ''மோர்'' எழுதச் சொன்னால் ''மொர்'' என்றும் எழுதுவேன், மற்றும் எழுதியது தவறென்று அம்மா சொன்னால் ஓவென்று அழுது விடுவேன்....அம்மா பொறுமையாக எனக்குப்புரியும் வரை சொல்லித்தருவாள். ஆனால் அம்மாவிற்கு இருக்கும் பொறுமை எனக்கு இருக்காது, விளையாட போக வேண்டுமென்று அடம் பிடிப்பேன், பயன் இருக்காது..... அன்று எனக்கு அம்மாவைப் பிடிக்கவில்லை....

இன்று தமிழில் நிறைய பிழைகள் இல்லாமல் எழுதுகிறேன் (existing typos courtesy: google transliteration)...இன்று எனக்கு அம்மாவைப் பிடித்திருக்கிறது :)

மூன்றாம் வகுப்பில் அப்பாவிற்கு Transfer நிச்சயமாகி விட்டது. திருச்சிக்கு சென்று விட்டோம். அடுத்த முறை வட இந்தியாவிற்கு Transfer கிடைத்தால் நான் ஹிந்தி தெரியாமல் கஷ்ட படுவேனென்று அம்மா பள்ளியில் என்னை ஹிந்திக்கு மாற்றி விட்டாள். புது பள்ளி, புரியாத பாஷை, கூடப்படிப்பவர்கள் சில வருடங்கள் ஏற்கனவே படித்த பாஷை.....நான் மட்டும் பின்தங்கியிருந்தேன்....அன்று எனக்கு அம்மாவைப் பிடிக்கவில்லை....

இன்று ஹிந்தி புரிந்து கொள்வதோ, பேசுவதோ சுலபமாகவும் இருக்கிறது, பல வட இந்திய நண்பர்கள் இருப்பதால் உபயோகமாகவும் இருக்கிறது....இன்று எனக்கு அம்மாவைப் பிடித்திருக்கிறது :)

அம்மா பாட்டியிடமிருந்து வயலின் வாசிக்க கற்றுக்கொண்டிருக்கிறாள். அதை மெருகேற்றுவதற்கு மறுபடியும் கிளாஸ் போக ஆரம்பித்தாள். என்னையும் அழைத்துச் செல்வாள் அதே இசைப்பள்ளியில் பாட்டுப் பயில. நான் தாத்தாவிடம் பாட்டு கற்றுக்கொண்டிறந்த நேரத்தில் அப்பாவிற்கு திருச்சிக்கு Transfer ஆனதால் நான் பாடுவது நின்று விட கூடாதென்று இந்த ஏற்ப்பாடு. முன் பின் தெரியாதவரிடம் பாட்டுக் கற்றுக் கொள்ள மாட்டேனென்று நான் ஆர்ப்பாட்டம் செய்ததை அம்மா காதில் போடுக் கொள்ளவேயில்லை.......அன்று எனக்கு அம்மாவைப் பிடிக்கவில்லை....

என் பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி எல்லோரும் பாடுவதில் படு கெட்டி....எந்த விசேஷம் என்றாலும் பாட்டு கூத்து இல்லாமல் இருக்காது. அவர்களுடன் சேர்ந்து இன்று சுமராகவாது பாட முடிகிறது....இன்று எனக்கு அம்மாவைப் பிடித்திருக்கிறது :)

மார்கழி மாசம் வந்து விட்டால் போதும்....நேரம் கெட்ட நேரத்தில் (6 மணி) என்னை எழுப்பி திருப்பாவை திருவம்பாவை பாட வைப்பாள். இது தவிர சஷ்டி என்றால் சஷ்டி கவசமும், மற்றும் நாட்களுக்கு ஏற்றது போல் ஹனுமான் சாலிசா, சௌந்தர்யா லஹரி - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் - எல்லாவற்றையும் கொட்டாவி விட்டுக்கொண்டு, அதற்கு திட்டும் வாங்கிக்கொண்டு சொல்லிருக்கிறேன்.... .அன்று எனக்கு அம்மாவைப் பிடிக்கவில்லை....

அர்த்தம் புரியாத வயதில் சொல்லிச் சொல்லி மனப்படமான ஸ்லோகங்கள் தான் இன்று என் ஞாபகசக்தி , நண்பர்கள் பார்த்து வியக்கும் ஞாபகசக்தி ! அர்த்தம் புரிந்த வயதில் மனதார சொல்லும் ஈடுபாடு வந்தது, அதன் பலனும் புரிந்தது........இன்று எனக்கு அம்மாவைப் பிடித்திருக்கிறது :)

நான்காம் வகுப்பில் திருச்சியில் வீடு மாறி விட்டோம். அந்த வீடு அம்மா ஆபீசிலிருந்து தள்ளி இருந்ததால், நானும் தம்பியும் பள்ளியிலிருந்து வந்து அம்மாவிற்காக ஒரு மணி நேரம் காத்திருப்போம். அம்மா என்னிடம் தம்பியை பார்த்துக் கொண்டு தின்னையில் உட்கார்ந்து தான் வரும் வரை homework செய்ய வேண்டுமென்று தினமும் சொல்லி அனுப்புவாள். என்னை நம்பி வீட்டுச் சாவியை கொடுக்கவில்லையே என்ற கோபம் எனக்கு.....அன்று எனக்குப் புரியவில்லை தம்பியை பார்த்து கொள்வதும் அந்த வயதிற்கு பொறுப்பு தானே!

ஐந்தாம் வகுப்பில் சென்னைக்கு திரும்பி விட்டோம். தாத்தா பாட்டி வீட்டில் இல்லாத சமயத்தில் அம்மா என்னிடம் வீட்டுச் சாவியை கொடுப்பாள். Flaskil boost கலந்து வைத்திருப்பாள். அதை தம்பியை குடிக்க வைத்து விட்டு நீயும் சாப்பிடு, TV பார்க்காமல் homework செய்யுங்கள்.....சொல்லிக் கொண்டே எங்கள் டிபன் பாக்ஸ் தயார் செய்வாள்.

ஆறாம் வகுப்பில் ஒரு படி மேலே சென்று என்னையே பால் காய்ச்சி boost போடச் சொல்லுவாள். அதுவும் விளக்கேற்றி நமஸ்காரம் செய்த பிறகு. நண்பர்கள் வீட்டிற்குச் செல்லும் பொழுது அங்கு அவர்கள் அம்மாவை பார்த்தால் நம் அம்மா நாம் பள்ளியிலிருந்து வரும் பொழுது வீட்டில் இல்லையே என்று ஏக்கமாக இருக்கும்.....அன்று எனக்கு அம்மாவைப் பிடிக்கவில்லை....

இன்று நான் குழந்தைப் பெற்றாலும் ஆபீசிற்கு போவதை நிறுத்த மாட்டேனென்று யாரிடமாவது சொல்லும் பொழுது உரைக்கிறது.....மற்றும் சிறு வயதிலிருந்தே அம்மாவை எல்லாவற்றுக்கும் நம்பி இல்லாமல் நானே காரியங்கள் செய்ய பழகியது தான் hostel சென்ற போதும் சரி, ஜெர்மனி வந்து போதும் சரி என்னை காப்பாற்றியது.....இன்று எனக்கு அம்மாவைப் பிடித்திருக்கிறது :)

ஏழாம் வகுப்பில் அம்மா என்னை சமையலறைக்குள் அழைத்தாள். முதல் நாளே சாதம் வைத்து ரசம் செய்து தொட்டுக் கொள்ள ஒரு கறியும் செய்ய வைத்தாள். அம்மா சொல்லச் சொல்ல தான் நான் சமைத்தேநேன்றாலும் போதும் போதுமென்றாகி விட்டது. அன்று எனக்கு அம்மாவைப் பிடிக்கவில்லை.....

இன்று ஜெர்மன்யில் தனியாக நான் சமாளித்துக் கொள்ளவும், என் நண்பர்களுக்கு சமையல் சொல்லிக் கொடுக்கவும் என் முன் அனுபவம் தான் கைக் கொடுத்தது. இன்று எனக்கு அம்மாவைப் பிடித்திருக்கிறது :)

பத்தாம் வகுப்பில் Board Exams. நான் இரவு முழித்திருந்துப் படித்தால் அம்மாவும் தூங்காமல் எதாவது வேலை செய்து கொண்டே இருப்பாள். நான் அடுத்த நாள் பரீட்சை முடிந்து மதியம் வீட்டிற்கு வந்து நிம்மதியாக தூங்கி விடுவேன், அம்மாவோ எப்பொழுதும் போல் ஆபீஸில் இருப்பாள். ஒன்ற இரண்டா பல நாட்கள்......

இப்படி இருக்க, ஒரு நாள் காலையில் என்னை நான்கு மணிக்கு எழுப்பச் சொல்லிருந்தேன். அம்மா களைப்பு தாங்காமல் தூங்கி விட்டாள். அவள் என்னை ஐந்து மணிக்கு எழுப்பிய போது, அந்த ஒரு மணி நேரத்தில் உலகமே மாறி விட்டது போல் லபோ திபோவென்று கத்தியதை நினைத்தால் இன்றும் வெட்கமாக இருக்கிறது....

நான் வளர வளர அம்மாவின் கண்டிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.....''போன் பேசாதே, நேரத்தோடு வீட்டிற்கு வா, இந்த டிரஸ் வேண்டாம்''....இப்படி ஏதாவதொன்று சொல்லி என்னை வெருப்பேற்றுவாள். அப்பாவும் நானும் ''சில பல விஷயங்கள்'' ;) பேசி கொண்டிருப்பதைக் கண்டு பேஜாராகி விடுவாள். அன்று எனக்கு அம்மாவைப் பிடிக்கவில்லை....

இன்று தம்பி தங்கைகள் Orkut scrapbookil வெவகாரமான scrap ஏதாவது கண்ணில் பட்டால் (மக்கள் எல்லாம் நெம்ப உஷார் - அப்போ அப்போ delete பண்ணிடுவாங்க), அப்படி ஒரு கோபம் வருகிறது...திட்டித் தீர்த்து விடுகிறேன் !......இன்று எனக்கு அம்மாவைப் பிடித்திருக்கிறது :)

கல்லூரி ஹாஸ்டலில் ஒரு வாரம் தான் இருந்திருப்பேன், அதற்குள் சனிக்கிழமை அம்மா எனக்கு மட்டுமில்லாமல் என் கூட இருப்பவர்களுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வந்து விட்டாள். தனக்கு கிடைக்கும் விடுமறை நாட்களிலும் தான் இளைப்பாறாமல் என்னை பார்க்க வந்து விட்டாள், என் அம்மா.

கல்லூரிக்கு பஸ்ஸில் சென்ற சமயம் அது. அம்மா ஏழு மணிக்கு ஆபிசிலிருந்து வந்து பாதி சமையலில் இருக்கும் பொழுது, கல்லூரியிலிருந்து எட்டு மணிக்கு வீடு திரும்பும் நான் சாப்பிட எதுவும் இல்லையா என்று பசியில் கத்தி ஆர்பாட்டம் செய்துருக்கிறேன். அன்று எனக்கு அம்மாவைப் பிடிக்கவில்லை.....

இன்று நாள் முழுவதும் ஆபிசிலிருந்து விட்டு வீடு திரும்பியதும் என் ஒருத்திக்கு கூட சமைக்க முடியாமல் bread/salad/cornflakes என்று OB அடித்துக் கொண்டிருக்கிறேன். இன்று எனக்கு அம்மாவைப் பிடித்திருக்கிறது :)

ஒரு முறை ஜனவரி ஒன்றாம் தேதி நானும் என் தோழியும் ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு புதுப்படம் பார்த்து விட்டு ஜாலியாக ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு சாயங்காலம் வீடு திரும்பினால் அம்மா கடுங்கோவத்தில் இருந்தாள்.....காரணம், நான் சினிமா தியாட்டரிலிருந்து போன் செய்து படம் பார்த்து விட்டு வருகிறேன் என்று சொன்னேன், பார்க்கலாமா என்று கேட்கவில்லை.....திட்டோ திட்டு.....என்ன தான் திட்டினாலும் அம்மா நயமாக தான் பேசுவாள்....இன்று வரை தப்பு நிறைய செய்து அம்மாவிடம் எவ்வளவோ திட்டு வாங்கிருந்தாலும் ஒரு நாள் கூட அவளிடம் பொய் சொல்லியதில்லை, சொல்ல வேண்டுமென்ற எண்ணமும் வந்ததில்லை.

ஜெர்மனி வந்து பிறகு, எப்பொழுது போன் செய்தாலும் என் தம்பி சற்று எரிச்சலாகவே கூறுவான் - ''அம்மாக்கு எப்போதும் சௌமி புராணம் தான் !''

என் திருமண பேச்சின் பொழுது அம்மாவிற்கு நான் விரும்புவரை விட அவர் அம்மாவை பற்றி தான் இன்னும் கவலை....மாமியார் நல்லவராக இருக்க வேண்டுமென்ற கவலை....என் அம்மாவின் ஆசியோ, ஆசையோ...அதுவும் நிறைவேறி விட்டது.

அந்த அந்த காலத்திற்கு ஏற்றது போல் அம்மா எனக்கு எவ்வளவோ அலங்காரம் செய்து அழகு பார்த்திருக்கிறாள் - இன்று பார்த்தாலும் கனகாம்பரம்/டிசம்பர் பூ வைத்த எனது போட்டோக்கள் சிரிப்பொலி எழுப்பும். அந்த கதைகளை சொல்ல ஒரு நாள் (பதிவு) போதுமா, இன்றொரு நாள் (இந்த ஒரு பதிவு) போதுமா ?! இதை தவிர ஒரு அம்மாவிற்கும் அவள் பெண்ணிற்குமிடையே இருக்கும் எவ்வளவோ விஷயங்கள், இது போல் பதிவில் சொல்ல முடியாத விஷயங்கள்.....

இன்றும் எப்பொழுது பாட்டியாகலாம் என்று ஆவலோடும், ஆசையோடும் காத்து கொண்டிருக்கிறாள், என் பெண்ணையும் வளர்க்க வேண்டுமாம் அவளுக்கு....என் அம்மாவிற்கு....என் அன்பு அம்மாவிற்கு....எனக்கு ரொம்ப பிடித்த என் அம்மாவிற்கு.....

Note of Wisdom: Aptly this is from amma - azha azha solluva amma, sirika sirika solluva mathava. Roughly translated, it means amma cares for you and has your best interest at heart even if what she says could hurt/annoy you momentarily.

Warning: When I talk about my parents, I have to discuss their upbringing and the resulting good qualities in me , so you didn't think that I would miss out on such a golden oppportunity to brag :D, did you ?

PS: Ammakum ice vechuten, ashok ammakum ice vechuten (banking credits to buy some time w.r.t grandkids :D)

PPS: I cannot believe I have written a 100 posts (and I still have some regular readers, nandri makkale) and what better time to talk about my amma, who taught me my first words ?!
Hit Counter
Website Hit Counter I had decided to have a counter only after I hit a 1000 views and since it happened last week (as on 14 Dec 2009), now is the time to see some stats :)